search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழியாறு அணை"

    • 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
    • இந்த ஆண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி. பாசனத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அணை குறிப்பிடத்தக்க பங்களிப்பை உடையது. 3864 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் மொத்தம் 120 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம்.

    ஆழியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர் ஆயக்கட்டு பாசனம், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி ஆழியாறு அணையில் 118.65 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அவ்வப்போது நீர்வரத்துக்கேற்ப மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது. இதன்காரணமாக 3 மதகுகள் வழியாகவும் வினாடிக்கு 600 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. மேலும் வினாடிக்கு 722 கனஅடிநீர் வரத்து உள்ளது. இதனால் ஆறு மற்றும் மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 1006 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    நேற்று மதியம் 12 மணிக்கு 119.5 அடியாக நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 900 கனஅடி நீர்வரத்தும் இருந்தது. மேலும் மேல்நீராறு, காடம்பாறை பகுதியில் இருந்து தண்ணீர்வரத்து அதிகம் இருந்ததால் 3 மதகுகள் மற்றும் ஆறு வழியாக வினாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்தாண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கு நீர்மட்டம் ஒரே அளவில் நீடித்து வருகிறது. மேலும் தொடர்மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதால் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை நீடிக்கிறது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
    • நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்ட த்தில் பி.ஏ.பி.பாசனத்தி ட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஆழியாறு அணைக்கட்டு 120 அடி உயரம்கொண்டது. இங்கு 3864 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும்.

    ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய-புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை கைகொடுக்காததால் ஆழியாறு அணை நிரம்பவில்லை. ஆனால் இந்தாண்டு நவமலை, வால்பாறை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அணைக்கு தொடர்நீர்வரத்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 16-ந்தேதி 91 அடி என்ற அளவில் இருந்த நீர்மட்டம் 18-ந்தேதி 100 அடியை தொட்டது. நேற்று காலை 8 மணிக்கு 109.30 அடியாக இருந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது.

    ஆழியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2634 கனஅடி நீர்வரத்து உள்ளது. மேலும் அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில்ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை, ரமணமுதலிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிடவேண்டுமென ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆழியாறு அணையின் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், `ஆழியாறு நீர்மட்டம் 115 அடியை தாண்டியதும் 2-வது கட்ட மற்றும் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். தொடர்ந்து 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து நீர்வரத்தும் அதிகமாக இருந்தால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும்' என்று தெரிவித்து உள்ளனர்.

    • கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
    • சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை வாயிலாக கோவை மாவட்டத்தில் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டுகளில் 50,350 ஏக்கர் நிலங்களும், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேல்ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்துள்ள பிரதான நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையில் கடந்த 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 88.60 அடியாக இருந்தது. மூன்று நாட்களில் 12.50 அடி அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.10 அடியாக உயர்ந்தது.

    நேற்று தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 106 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 3,709 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 84 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல சோலையார் அணையும் நிரம்பி உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் உள்ள 10 தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக கருதப்படுவது சோலையார் அணையாகும். சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையார் ஆற்றின் குறுக்கே 3290 அடி உயரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள சோலையார் அணை, 5392 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் கொள்ளளவு கொண்டது. சோலையார் அணை தான் தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் மிக உயரமான அணையாகும்.

    சோலையாறு அணையின் மொத்த உயரம் 165 அடி ஆகும். தற்போது அணையின் நீர்மட்டம் 161 அடியாக உள்ளது. மேலும் நீர்மட்டம் அதிகரிக்கும்பட்சத்தில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.

    • வால்பாறை பகுதியிலுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகளின் நீர் இருப்பும் உயரவில்லை.
    • தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும்.

    பொள்ளாச்சி:

    ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்தாண்டு ஜூலை முதல் வாரமாகியும், இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்காததால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் பருவமழையை பயன்படுத்தி நடைபெறும் விவசாய பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

    மேலும், வால்பாறை பகுதியிலுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகளின் நீர் இருப்பும் உயரவில்லை. நேற்று காலை நிலவரப்படி 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 19.05 அடியாகவும்,120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும். தற்போது, அணைப்பகுதி தண்ணீர் இன்றி மண் திட்டுகளாகவும், பாறை முகடுகளாகவும் காட்சியளிக்கிறது. மழைப்பொழிவு இன்றி விவசாயம் பொய்த்துவிடும் சூழல் ஏற்படாமல் இருக்கவும், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர வேண்டியும் ஆழியாறு அணையின் மீது உள்ள விநாயகர் கோவிலில் விவசாயிகள் கணபதி யாகம் நடத்தினர்.

    ஆழியாறு அணை உதவி செயற்பொறியாளர் சிங்கார வேல், உதவிப் பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

    • அணைக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆங்கிலேயர் பாலம் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணை உள்ளது. தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் அணையில் உள்ள பாறைகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெளியே தெரிகின்றன.

    நீர்மட்டம் குறைந்து விட்டதால் சித்தாறு, கவியருவி ஆகியவை சேரும் அணைப்பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆழியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாததால் நீர் மட்டம் குறைந்ததால் அணையில் உள்ள முதலைகள் கரைப்பகுதிக்கு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்குவது, வனப்பகுதியில் உள்ள அணை பகுதிக்குள் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.

    ஆங்கிலேயர் கால பாலம் மற்றும் அறிவுத்திருக்கோவிலுக்கு எதிரே அணைக்குள் சற்றுலாபயணிகள் இறங்குவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் தண்ணீர் குறைவாக இருப்பதால் சேற்றில் சிக்கியும் உயிரிழப்பு ஏற்படக்கூடும். சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அணைக்குள் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கிலேயர் பாலம் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழை காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
    • நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் அதன்பிறகு எதிர்பார்த்தப்படி மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மழை பெய்யாததாலும், கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் குறைந்ததால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறை செல்வதற்கு போடப்பட்ட தார் சாலை வெளியே தெரிகிறது. தற்போது நீர்மட்டம் சரிவால், ஆங்கிலேயர் காலத்து பாலம் மற்றும் தார் சாலை வெளியே தெரிகின்றன. 100 ஆண்டுகள் கடந்தும் பாலமும், தார் சாலையும் இன்னும் அப்படியே காட்சி அளிக்கின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் வால்பாறை சாலையில் நின்று கண்டு ரசித்து செல்கின்றனர்.

    ஆழியாறு அணை கட்டுவதற்கு முன் மலை பகுதியான வால்பாறை செல்வதற்கு 1897-ம் ஆண்டு சாலை அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தது. இதையடுத்து கரடு முரடான மலைப்பாதையில் சாலை அமைக்க லோம் என்பவரை அப்போதைய ஆங்கிலேய அரசு நியமித்தது. அதனைத்தொடர்ந்து 1903-ம் ஆண்டு சாலை பணிகள் முடிந்ததும், சென்னை மகாண கவர்னர் லார்ட் ஆம்பிள் சாலை திறந்து வைத்தார். ஆழியாறில் இருந்து பாரளை வழியாக சிறுகுன்றாவுக்கு சாலை அமைக்கப்பட்டது.

    அணை கட்டுவதற்கு முன் இந்த வழித்தடத்தில் மழை காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இந்த பாதையை வால்பாறைக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற பின், காமராஜர் ஆட்சி காலத்தில் பொள்ளாச்சி பகுதி பாசனம் பெறும் வகையில் அணை கட்ட திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1962-ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. அணை பகுதியில் ஒரு சில கிராமங்களும், வால்பாறை செல்லும் ரோடு இருந்தது.

    இதையடுத்து வால்பாறை செல்ல மாற்று வழிப்பாதை அமைக்கப்பட்டது. மேலும் அங்கு குடியிருந்த மக்களுக்கும் மாற்று இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அணை நிரம்பினால், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் தண்ணீர் மூழ்கி விடும். நீர்மட்டம் குறையும் போது, ஆங்கிலேயர் காலத்து பாலம், சாலை வெளியே தெரியும்.

    • ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • கடை மடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் சென்று சேர்வதில்லை.

    பல்லடம் :

    பல்லடம்,ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

    இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன் கூறியதாவது:- பி.ஏ.பி. பாசனத் திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜர் கொண்டு வந்தது. அன்றைய விவசாய நிலங்களை கணக்கிட்டு போடப்பட்ட திட்டம். இந்த நிலையில் ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை, பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,சூலூர்,பல்லடம்,காங்கேயம்,ஆகிய தாலுகாக்களில் உள்ள சுமார் 3,97,000 ஏக்கர் விவசாயநிலங்களில் பாசனத்திற்கும்,குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம். மழைப்பொழிவை அளவீடு செய்து, 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின்படி உப்பாறு அணை, மற்றும் வட்டமலை அணைகளுக்கு தண்ணீர் விட முடியாத பற்றாக்குறை நிலை உள்ளது.

    மேலும் கடை மடை பகுதிகளுக்கு சரிவர தண்ணீர் சென்று சேர்வதில்லை. இப்படி ஏற்கனவே பற்றாக்குறை உள்ள திட்டத்தில் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப் போவதாக அறிவித்த நிலையில் விவசாயிகள் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.அரசு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில் தற்போது இந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது விவசாயிகளை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

    ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல பல்வேறு வழிகள் இருக்க ஏற்கனவே பற்றாக்குறையில் உள்ள பி.ஏ.பி. பாசனத் திட்டத்திலிருந்து தண்ணீரை எடுப்பது என்பது இந்தப் பகுதி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது :-

    ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம்,930 கோடி ரூபாய் திட்டம் செயல் படுத்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது கொங்குமண்டல விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் சுமார் 124 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் வழியாக பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,பல்லடம்,உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கும்,பொதுமக்களுக்கு குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம். 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. ஒட்டன்சத்திரம் நகருக்கு ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து போதுமான குடிநீர் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது, ஒட்டன்சத்திரம் அருகே அறிவிக்கப்பட உள்ள சிப்காட்டிற்க்கும், 40க்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கும் தண்ணீரை விற்பதை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்த உள்ளார்கள். இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்காகவும், தமிழ்நாடு முதல்வரின் நேரடி கவனத்தை ஈர்ப்பதற்காகவும், வருகிற 21-08- 2022 - ஞாயிற்றுகிழமை பி.ஏ.பி. விவசாயிகள் இணைந்து திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவிலிருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி,ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி, சுமார் 20,000 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற உள்ளது.

    அனைத்து தடைகளையும் தாண்டி, விவசாயிகளை மிகப் பெரிய அளவில் திரட்டி, வெற்றிகரமாக பேரணி நடத்தி தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்த்து, ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு ரத்து செய்யும் வரை தொடர்ச்சியாக அனைத்து வகையான போராட்டங்களிலும் ஈடுபடுவோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியாகி உள்ளது விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஒன்றிணைந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் தற்போது அந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டிருப்பது. விவசாயிகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தூக்குத் தண்டனை கைதிக்கு கூட அவனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் வழக்கமுள்ள நாட்டில், விவசாயிகளின் கோரிக்கையை கேட்டுவிட்டு, அதற்கு பதில் தராமல் திட்டத்தை அறிவிக்கும் அரசை என்ன சொல்வது, இதுதான் விவசாயிகளின் மீது அரசு காட்டும் அக்கறையா?, இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் முடிவுஎடுத்திருக்க மாட்டார். அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர் அறிவித்து இருக்கக்கூடும். ஏனென்றால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் விவசாய நிலங்களுக்கு முறையாக தண்ணீர் கொடுக்க முடியவில்லை இந்த நிலையில் எப்படி ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் வழங்க முடியும்.எனவே இந்தத் திட்டத்தை கைவிட்டு பி.ஏ.பி. பாசன விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விரைவில் பல்லடத்தில் உள்ள பி.ஏ.பி. திட்ட அலுவலகம் முன்பு விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தலைமையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
    • ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பாசன சபை சார்பில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    பல்லடம் :

    விவசாயிகள் துவக்கிய ஆழியாறு அணை பாதுகாப்பு இயக்கம் துவக்கினர். இது குறித்து பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார விவசாயிகள் கூறியதாவது:-பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.

    இதுபோல் இந்தத் திட்டத்தில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு 930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பாசன சபை சார்பில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட தயாராகினர்.அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சுவார்த்தை நடத்தியும் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. இது பாசன விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து .விவசாயிகள் கூறுகையில்,ஆ ழியாறு அணை பாதுகாப்பு இயக்கம் துவக்கி உள்ளோம்.

    அதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். நாளை உடுமலையில் இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது, அதில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆழியாறு அணையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.
    • ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது.

    இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, சுமூகத் தீர்வு காண்பதற்காக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் நேரு ஆகியோர் தலைமையில் வருகிற 1-ந்தேதி அன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.) ஆழியாறு, மற்றும் திருமூர்த்தி அணை மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தற்போது கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணையில் ஏற்கனவே காவேரி ஆற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் இரு கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரத்து செய்து விட்டு, ஆழியாறு மூலம் திட்டம் செயல்படுத்தப் படுவதாக தெரிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஆழியாற்றின் தண்ணீர் மூலம் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

    ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் பழைய ஆயக்கட்டிற்கு 2.44 டி.எம்.சி.யும், கேரளாவுக்கு 7¼ டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். தினமும் வினாடிக்கு 50 கன அடி வீதம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    ஏற்கனவே பி.ஏ.பி. திட்டத்தில் நீர்பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசனப் பகுதி விவசாயிகள் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் பொள்ளாச்சியில், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்பாட்டத்தை நடத்தினர்.இதே போல் திருமூர்த்தி அணை மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து உடுமலைப்பேட்டையில் ஆலோசனை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து வரும் 27 -ந் தேதி பொள்ளாச்சியில், ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் 137 பாசன சபைகளைச் சேர்ந்த விவசாயிகள்,ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் முக்கிய அணையாக பரம்பிகுளம் அணை விளங்குகிறது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில் 17 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டி வருவதால் பிஏபி திட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71½ அடியாக உயர்ந்தது.

    தற்போது அணையில் 17 ஆயிரத்து 670 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் உயர்ந்து தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நேற்று இரவு உபரிநீர் மதகுகள் வழியாக வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை உபரிநீர் திறப்பு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கேரளாவில் உள்ள பெருங்கல்குத்து என்ற அணைக்கு செல்கிறது. அந்த அணை நிரம்பிய பின்பு உபரிநீர் திருச்சூர் சென்று அரபிக்கடலில் கலக்கும்.

    இதேபோல் ஆழியாறு அணை 117 அடியை எட்டியது. இதனால் 2-வது முறையாக நேற்று மாலை மதகுகள், பைபாஸ், மின் உற்பத்தி நிலையம், கால்வாய்கள் வழியாக மொத்தம் 2140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், உபரிநீர் வெளியேற்றுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆழியாற்றங் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×